விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது: நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் புரட்சி தேவை ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் புரட்சி தேவை என்றும், விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதாகவும் தேனியில் நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தேனி,
தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில், 197 பெண்களுக்கு மொத்தம் ரூ.49 லட்சத்து 21 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர்கள், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 56 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகள், பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் 47 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகள், பேரூராட்சி பகுதிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 227 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் ஆகியவை வழங்கப்பட்டது.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:–
ஜெயலலிதா கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எந்த வகையிலும் குறையாமல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முழுமையாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். முதற்கட்டமாக 3 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து 2021–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
கல்வித்துறைக்கு இந்த அரசு ஆண்டுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இதனால் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கல்வியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் புரட்சி தேவை. மாநிலத்தில் 60 சதவீதம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், உரம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் துன்பப்படக்கூடாது என்பதற்காக அரசே உதவிகள் செய்து வருகிறது. அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் கொடுக்க மறுத்துள்ள போதிலும், கடந்த 4 ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.