விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 67 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 67 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2018 3:30 AM IST (Updated: 23 Jun 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி திருவாரூர், மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 67 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆர்்ப்பாட்டம் நடத்துவது என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்து இருந்தது. இந்த ஆர்்ப்பாட்டத்திற்கு திருவாரூர் டவுன் போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர்.

இதனை மீறி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மண்டல அமைப்பு செயலாளர் வேலுகுணவேந்தன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் நிலவன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சிறைச்செல்வன், பூபாலன், சேதுராமன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல மன்னார்குடி பெரியார் சிலை அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டித்தும், துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரியும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணைச் செயலாளர் ரமணி, மன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story