தாராபுரம் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி, பெண் உள்பட 3 பேர் காயம்


தாராபுரம் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி, பெண் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் அவரது நண்பர்கள் 2 பேரும் வேனில் வந்த பெண்ணும் காயம் அடைந்தனர்.

தாராபுரம், 

விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதா வது:-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கி இருந்து கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் காற்றாலையில் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார். இதே காற்றாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த தங்கவேல் (23) மற்றும் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த ரெஜிபிலிப் (21) ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் நேற்றுகாலை நண்பர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோவிந்தாபுரத்துக்கு டீ குடிப்பதற்காக சென்றனர். மோட்டார்சைக்கிளை ரெஜிபிலிப் ஓட்டிச்சென்றார். அவர்கள் செட்டிப்பாளையம் அருகே வந்துகொண்டிருந்த போது கரூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அந்த வேனை அப்துல்ரகுமான் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் சித்ரா என்பவர் உடன் வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் வந்த வேன் எதிர்பாராதவிதமாக நண்பர்கள் 3 பேர் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த வேன் டிரைவர் அப்துல்ரகுமான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் ரோட்டில் விழுந்த நண்பர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். அத்துடன் காயம் அடைந்த தங்கவேல், ரெஜிபிலிப் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனில் வந்த சித்ராவும் காயம் அடைந்தார். அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் அப்துல்ரகுமானை தேடி வருகின்றனர்.

Next Story