கல் உடைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


கல் உடைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Jun 2018 3:30 AM IST (Updated: 23 Jun 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே கல்குவாரியில், கல் உடைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே கோட்டூர்கோணத்தை சேர்ந்தவர் பெனடிக்ட் (வயது 42), தொழிலாளி. இவர் மங்கலம் அருகே காயக்கரையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெனடிக்ட் எந்திரம் மூலம் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் வேறு சில தொழிலாளர்களும் இருந்தனர்.

அப்போது, அவர் எந்திரத்தில் இருந்த ஒரு கல்லை எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதில் அவரது கை எந்திரத்தில் சிக்கி கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உள்ளே இழுக்கப்பட்டு உடல் முழுவதும் எந்திரத்தில் நசுங்கி படுகாயம் அடைந்தார். இதனால், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்று எந்திரத்தை நிறுத்தி அவரை மீட்டனர். தொடர்ந்து, அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பெனடிக்ட் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெனடிக்டின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தொழிலாளிக்கு மேனகா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகன் அருகில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கல்குவாரியில் நடந்த விபத்தில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story