சட்டசபை கூட்டுகூட்டம் கவர்னர் உரையுடன் 2–ந் தேதி தொடங்குகிறது கர்நாடக பட்ஜெட் 5–ந் தேதி தாக்கல் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் வருகிற 2–ந் தேதி கவர்னர் வஜூபாய்வாலா உரையுடன் தொடங்குகிறது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் வருகிற 2–ந் தேதி கவர்னர் வஜூபாய்வாலா உரையுடன் தொடங்குகிறது. 5–ந்தேதி பட்ஜெட் செய்வது என்று மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சிகர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து உள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர். மேலும் 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் 7 மந்திரி பதவி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மந்திரி பதவி கிடைக்காத இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்–மந்திரி குமாரசாமி முடிவு செய்தார். பட்ஜெட் தயாரிப்புக்காக பல்வேறு துறை வல்லுனர்கள், விவசாய பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்.
மந்திரிசபை கூட்டம்இந்த நிலையில் இந்த கூட்டணி அரசின் முதல் மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் ரத்னபிரபா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. அதனால் கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் வருகிற 2–ந் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 5–ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பகல் 11.30 மணிக்கு பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள குமாரசாமி தாக்கல் செய்கிறார்.
9 வேலை நாட்கள்இந்த கூட்டத்தொடர் 12–ந் தேதி வரை 9 வேலை நாட்கள் நடைபெறும். அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தை ஜூலை மாத இறுதிக்குள் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. துறைகளில் மொத்தம் உள்ள ஊழியர்களில் 4 சதவீதம் பேரை பணி இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் உயர்கல்வி தரத்திற்கு 2–வது நிலை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு 40 சதவீத நிதியை அதாவது ரூ.460 கோடியை ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கர்நாடக மேல்–சபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி காலியாக உள்ளது. மேல்–சபை தற்காலிக தலைவராக பசவராஜ் ஹொரட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசின் பசல்பீமா பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு காப்பீட்டுத்தொகையை செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.655 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
10 ஆண்டுகள் வரை நீட்டிக்க...இந்த கூட்டத்தில், பத்ம விருதுக்கு பெயர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் முதல்–மந்திரிக்கு வழங்கப்பட்டது. மழை பாதிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநில அரசு ரூ.333.50 கோடி வட்டி இல்லாத கடன் வழங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை அடுத்த 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு ரூ.115 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ராமநகரில் ரூ.16.85 கோடி செலவில் முதல் நிலை கல்லூரி தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.