கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Jun 2018 4:15 AM IST (Updated: 23 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு, 

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் உலக நலன் வேண்டி நடந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈரோட்டில் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் சக்கரத்தாழ்வாருடைய நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 20-ந் தேதி காலை 6 மணிக்கு யாகம் தொடங்கியது. பின்னர் 9 மணிக்கு கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் அக்னி பற்ற வைத்து லட்ச ஆவர்த்தி யாகம் நடந்தது. இதையடுத்து முதல்கால பூஜையும், மாலையில் 2-ம் கால பூஜையும் நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், கோ பூஜையும், மாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 5-ம் கால பூஜை, கோ பூஜை, சுப்ரபாதம், திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி, பூச்சூட்டல், கும்ப ஆராதனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து காலை 7 மணிக்கு 1 லட்சத்து 8 ஆவர்த்தி ஹோமத்துடன் யாகம் நிறைவடைந்தது. பின்னர் காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு சக்கரத்தாழ்வாரின் உற்சவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story