மாவட்ட செய்திகள்

இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் + "||" + Popular in India Government School Teacher

இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர்

இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர்
அரசு பள்ளி ஆசிரியர் பகவான் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். அவரை ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் உள்ளிட்டோர் பாராட்டினர்.
பள்ளிப்பட்டு,

மக்களிடையே தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசு பள்ளிகளை தற்போது புறக்கணித்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து சில அரசு பள்ளிகளை மூடுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.


அதே சமயம் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு ஒரு காலத்தில் தனி மரியாதை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஆசிரியர்-மாணவர்கள் உறவு மெச்சத்தக்கவகையில் இல்லை. இருப்பினும் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பகவான். பாடம் எடுக்கும் அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட அக்கறை போன்ற காரணங்களால் இப்பள்ளி மாணவர்களுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. மேலும் பகவானின் அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

இந்த சூழ்நிலையில் பகவானுக்கு, திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்ய உத்தரவு வந்தது. இதை அறிந்த மாணவ-மாணவிகள் அவரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் அரசு உத்தரவின் பேரில் வேறு வழியின்றி பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்க வந்த பகவானை, வெளியே செல்ல விடாமல் மாணவ-மாணவிகள் தடுத்து கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதையடுத்து பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் பணிபுரிய அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

மாணவர்கள் - ஆசிரியர் இடையே நடந்த இந்த பாச போராட்ட காட்சிகள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இது வழக்கமான இடமாற்றம் தான். ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பால் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. பகவானை கட்டிப்பிடித்து மாணவர்கள் அழுத காணொலியை கண்ட பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தில் மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருந்தது. அன்று திரையில் நிகழ்ந்தது, தற்போது வெளியகரம் அரசு பள்ளியில் நிஜமாகி இருக்கிறது.

பகவான் பற்றிய செய்தியை பார்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குரு- சிஷ்யர்கள் என்று பாராட்டி பூங்கொத்து படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த பாசப்பிணைப்பு நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது, ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு ஆசிரியரின் இடமாற்றம், மாணவர்களை கதறி அழ செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்து பாருங்கள். அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான (நல்லாசிரியர்) ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பணிமாறுதலை 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விவேக் மற்றொரு பதிவில், ‘சூப்பர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும், உயர்கல்வி அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனிடையே திருத்தணி கல்வி மாவட்ட அதிகாரி அருட்செல்வன் நேற்று வெளியகரம் பள்ளிக்கு திடீரென சென்று ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் மனநிலையை அவர் கேட்டறிந்தார். ஆசிரியர் பகவான் உள்பட அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

கூட்டம் முடிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரியை செய்தியாளர்கள் சந்தித்து, ஆசிரியர் பகவான் தொடர்ந்து இதே பள்ளியில் நீடிப்பாரா? அல்லது வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதை முதன்மை கல்வி அதிகாரி தான் முடிவு செய்வார் என கூறிவிட்டு சென்றார்.