போலீசாரை தாக்கிய சேலம் கொள்ளையர்கள் ஒருவர் பிடிபட்டார்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு


போலீசாரை தாக்கிய சேலம் கொள்ளையர்கள் ஒருவர் பிடிபட்டார்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Jun 2018 4:38 AM IST (Updated: 23 Jun 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசாரை தாக்கிய சேலம் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி வீ.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் முருகனும், போலீஸ்காரர் சிதம்பரம் (22) என்பவரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது.

இதை பார்த்த ஏட்டு முருகன் அந்த காரின் அருகில் சென்றார். போலீசாரை பார்த்தும் காரில் இருந்த 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரை பின்னோக்கி எடுக்க முயன்றனர். அதற்குள் காரை மடக்கிய ஏட்டு முருகன் காரை நிறுத்தி சாவியை கையில் எடுத்துகொண்டார். இதனால் காரிலிருந்து 4 பேரும் இறங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென 4 பேரும் போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் சிதம்பரம் ஆகியோரை தாக்கினார்கள். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் போலீஸ் ஏட்டின் கையில் கடித்து விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த 4 பேரில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பியோடி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த 4 பேரும் வந்த காரையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் இரும்பு கம்பிகள், கையுறை, முகமூடி ஆகியவை இருந்தன. இதையடுத்து அந்த காரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் சிதம்பரம் ஆகியோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த விநாயகம் (வயது 28) என தெரியவந்தது. குமாரசாமிப்பேட்டை பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நள்ளிரவில் காரில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து பிடிபட்ட விநாயகத்தை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய 3 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் போலீசாரை தாக்கி விட்டு கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் தப்பியோடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story