ரஜினிகாந்த்,கமல்ஹாசன் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று பரமக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திடலில் அ.தி.மு.க.வின் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், குப்புசாமி, முத்தையா, முனியசாமி பாண்டியன், காளிமுத்து, அந்தோணிராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பரமக்குடி ஜெயலலிதா பேரவை நகர் செயலாளர் வடமலையான் ஆகியோர் வரவேற்று பேசினர். முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சுப்பிரமணியன், மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் பேசியதாவது:– தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாகவும், அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சியாகவும் விளங்குவது அ.தி.மு.க. தான். தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மட்டும் தான் உண்டு. காரணம் அரசியலில் கட்டமைப்பு, 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி உள்ள கட்சிகளாகும்.
மற்ற கட்சிகளுக்கு எல்லாம் இது கிடையாது. தற்போது உருவாகும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் ஒற்றுமையுடன் ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி செல்கின்றனர். அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி வைக்காது. மத்திய அரசோடு இணக்கமான சூழ்நிலை வேண்டும் என்பதற்காகத்தான் பா.ஜ.க.வுடன் உறவாடி வருகிறோம். ஸ்டெர்லைட் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க. தான் காரணம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினையை தூண்டிவிட்டு முன்நின்று நடத்தியவர்கள் மீது தான் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தை போலவே இப்போதும் சட்டம் –ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தினகரன் ஆரம்பித்துள்ள அ.ம.மு.க. எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் தான் போராட்டங்களை தூண்டுகின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அவை தலைவர் செ.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், துணை செயலாளர் துரைவினோத், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், நகர் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கார்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெய்சங்கர், பரமக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், பார்த்திபனூர் வினோத்குமார், இளைஞர் பாசறை அம்மா சரவணன், வார்டு செயலாளர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.