காவல்துறை மூலம் தமிழக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
தமிழக அரசு காவல் துறை மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று, டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.
மதுரை,
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்தியும் அறவழியில் போராட்டம் நடத்தியவர் தான். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதாரகேடு ஏற்படுவதால் போராட்டம் ஏற்பட்டது. சேலம்–சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?.
தமிழக அரசு காவல்துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போன்று மத்திய அரசு தமிழக அரசை காப்பாற்றி வருகிறது. எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது. 2 அமைச்சர்கள் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.
சேலம்–சென்னை 8 வழிச்சாலையை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேச வேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?. இதற்காக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது.
குட்கா விஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்த விதம் என்பது நகராட்சியில் திறந்தது போல் இருந்தது. இது அவரை இழிவுபடுத்தும் விதமாக இருந்தது. எனவே தான் அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் நான் தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அது நடக்கவில்லை.
விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி உயிரோடு இருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் அவரையும் தேசத்துரோக வழக்கில் தமிழக அரசு கைது செய்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.