தேனி நகரில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை 33 ஆண்டுகளாக அதிகரிக்காத எண்ணிக்கை


தேனி நகரில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை 33 ஆண்டுகளாக அதிகரிக்காத எண்ணிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2018 3:30 AM IST (Updated: 24 Jun 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

தேனி நகரில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை நீடிக்கிறது. கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்த எண்ணிக்கை அதன்பிறகு அதிகரிக்கப்படாமல் உள்ளது.

தேனி,

தேனியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் பற்றாக்குறை நீடித்து வருகிறது. மாவட்டத்தின் தலைநகரான தேனியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாமல் போலீசார் தவித்து வருகின்றனர்..

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து தேனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 1996–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1997–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் தேனி தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் உதயமான உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மதுரையில் இருந்து பிரிந்து தேனியை தலைமையிடமாக கொண்டு செயல்படத் தொடங்கியது.

தேனி மாவட்டம் உதயமாகும் முன்பே, மதுரை புறநகர் பகுதியில் இருந்த தேனியில் 1985–ம் ஆண்டில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் செயல்பட்டது. அப்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 14 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது வரை அதே பணியிடம் தான் நீடிக்கிறது. அதிலும் இன்ஸ்பெக்டர் பணியிடம் கடந்த 2 மாத காலமாக காலியாக உள்ளது.

கடந்த 33 ஆண்டு கால கட்டத்தில் தேனி நகர் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளது. மக்கள் தொகை, வணிக நிறுவனங்கள் வளர்ச்சி, வாகன போக்குவரத்து போன்றவை அதிகரித்து உள்ளது. போக்குவரத்து சிக்னல்கள் எண்ணிக்கை, விபத்து அபாயம் நிறைந்த பகுதிகளும் அதிகரித்துள்ளன. ஆனால், அதற்கு ஏற்ப போலீசார் பணியில் இல்லை.

தற்போதைய நிலையில் தேனியில் நேரு சிலை, அரண்மனைப்புதூர் விலக்கு, மதுரை சாலையில் புறவழிச்சாலை சந்திப்பு, புதிய பஸ் நிலையம், அன்னஞ்சி விலக்கு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இதில் நேரு சிலை, புறவழிச்சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சிக்னலில் மட்டுமே போலீசார் பணியில் உள்ளனர். மற்ற சிக்னல்கள் போலீசார் பற்றாக்குறையால் செயல்படாமல் உள்ளது.

அதேபோல், கம்பம் சாலையில் சுப்பன் தெரு சந்திப்பு, பள்ளிவாசல் தெரு சந்திப்பு, பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதி, பஸ்கள் நுழைவுப் பகுதி, வாரச்சந்தை, பங்களாமேடு, எடமால் தெரு சந்திப்பு உள்பட நகரில் சுமார் 32 இடங்களில் போலீசார் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு ஏற்ப ஆட்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இருக்கும் போலீசாரை கொண்டு அன்றாடம் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், வாரச்சந்தை நடக்கும் நாள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும் போதும், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வருகையின் போதும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அத்துடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், குச்சனூர் சனீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெறும் நாட்களிலும் தேனியில் போக்குவரத்து போலீசார் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதுபோன்ற நாட்களில் தேனி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே, தேனி நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையை தற்போதைய தேவைக்கு ஏற்ப இருமடங்காக அதிகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு போலீசார் மத்தியில் பல ஆண்டுகளாக உள்ளது.


Next Story