ஏரி மராமத்து பணியை முறையாக செய்ய கோரி பொக்லைன் எந்திரங்கள் சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஏரி மராமத்து பணியை முறையாக செய்ய கோரி பொக்லைன் எந்திரங்கள் சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஏரி மராமத்து பணியை முறையாக செய்ய கோரி பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே ம.புடையூர் கிராமத்தில் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டு, இந்த ஏரியில் மராமத்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரிக்கரையில் குறைந்த அளவு மட்டுமே கிராவல் மண் கொட்டப்பட்டதாகவும், சரியான அளவில் ஏரிக்கரையை உயர்த்தவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் ஏரியில் உள்ள 2 மதகில் ஒரு மதகு உடைந்துள்ளது. அதில் உடைந்த மதகை சரிசெய்யாமல், நல்ல முறையில் உள்ள மதகை இடித்து விட்டு புதிதாக கான்கிரீட் போடுவதாகவும், அந்த பணிகளும் தரமானதாக நடைபெறவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஏரி மராமத்து பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறி, அங்கிருந்த 2 பொக்லைன் எந்திரத்தை ஒப்பந்ததாரர் எடுத்து செல்ல வந்தார். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மராமத்து பணியை முறையாக செய்து முடிக்கவில்லை. எனவே பொக்லைன் எந்திரங்களை எடுத்து செல்லக்கூடாது என்று கூறி, அதனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்றும் பொக்லைன் எந்திரத்தை எடுத்து செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரி மராமத்து பணியை முறையாக செய்து முடிக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களில் சிலர் பொக்லைன் எந்திரத்தின் மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story