சரக்கு ஆட்டோவில் பிளாஸ்டிக் சாக்குகளை வைத்து நூதன முறையில் மணல் கடத்தல்


சரக்கு ஆட்டோவில் பிளாஸ்டிக் சாக்குகளை வைத்து நூதன முறையில் மணல் கடத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:30 AM IST (Updated: 24 Jun 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பிளாஸ்டிக் சாக்குகளை வைத்து நூதன முறையில் மணல் கடத்திய சரக்கு ஆட்டோ மற்றும் லாரி, 3 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் வேலூர் தாசில்தார் பாலாஜி, சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் கனகராஜ், சீனிவாசன், அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் வேலூரை அடுத்த கருகம்புத்தூர் ஹாஜிபுரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பிளாஸ்டிக் சாக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. இதைப்பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் பிளாஸ்டிக் சாக்குகளை ஏற்றி செல்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், பாலாற்றில் இருந்து மணல் திருடி, அதனை ஆட்டோவில் நிரப்பி அதன் மேலே பிளாஸ்டிக் சாக்குகளை வைத்து நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சரக்கு ஆட்டோவின் உரிமையாளரான முள்ளிப்பாளையத்தை சேர்ந்த சபரிக்கு ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 15 யூனிட் மணலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ரோந்து பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரான காட்பாடி கோபாலபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்கு ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று சத்துவாச்சாரி, சேண்பாக்கம் பகுதியில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story