திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை


திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2018 2:58 AM IST (Updated: 24 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மேற்கு பகுதியான கார்க்கில் நகர் பகுதியில் உள்ள 15 தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் குழாயில் அனுமதி இன்றி குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

சில பணிகளுக்கான கடந்த வாரம் அந்த குழாயில் குடிநீர் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், குடிநீர் வாரிய பகுதி செயற்பொறியாளர் விஜயபிரகாஷ் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் அந்த பகுதி பெண்கள், தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2 நாட்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், மேலும் அந்த பகுதியில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதைதொடர்ந்து லாரிகள் மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 

Next Story