கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடன் இரு கட்டமாக தள்ளுபடி குமாரசாமி தீவிர ஆலோசனை
கர்நாடகத்தில் ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை இரு கட்டமாக தள்ளுபடி செய்வது குறித்து முதல்–மந்திரி குமாரசாமி தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை இரு கட்டமாக தள்ளுபடி செய்வது குறித்து முதல்–மந்திரி குமாரசாமி தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
பா.ஜனதா நெருக்கடிகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்–மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் ரூ.53 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படும் என்றும், நான் முதல்–மந்திரி ஆக பதவி ஏற்ற 24 மணிநேரத்தில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் குமாரசாமி கூறியிருந்தார்.
ஆனால் குமாரசாமி முதல்–மந்திரி ஆகி இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து தான் விவசாய கடன் தள்ளுபடி செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கூட்டணி அரசு காலம் தாழ்த்தி வருவதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசுக்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நெருக்கடி கொடுத்து வருகிறார்
. ரூ.33 ஆயிரம் கோடி தள்ளுபடி?இந்த நிலையில், கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை அடுத்த மாதம் (ஜூலை) 5–ந் தேதி நிதி இலாகாவை தன்வசம் வைத்துள்ள முதல்–மந்திரி குமாரசாமி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக ஒவ்வொரு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் குமாரசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பட்ஜெட் தயாரிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்த மாதம் 5–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட முதல்–மந்திரி குமாரசாமி முடிவு செய்திருப்பாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விவசாயிகள் கடன் ரூ.53 ஆயிரம் கோடியை 2 கட்டமாக தள்ளுபடி செய்ய குமாரசாமி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக அடுத்தமாதம் 5–ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது விவசாயிகள் கடன் ரூ.33 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்கலாம் என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து 2–வது கட்டமாக ரூ.20 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் துணை முதல்–மந்திரி பரமேஸ்வருடன் குமாரசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.