பெரம்பூர், வியாசர்பாடி பகுதியில் கேட்பாரற்று நிற்கும் மோட்டார் சைக்கிள்களில் உதிரிபாகங்கள் திருட்டு
மோட்டார் சைக்கிள்ளை நோட்டமிடும் திருட்டு கும்பல், மோட்டார் சைக்கிள்களில் இருந்து பேட்டரி, சக்கரங்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களை திருடிச்சென்று விடுகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை செம்பியம், கொடுங்கையூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்மநபர்கள், தனியாக நடந்து செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் இந்த சம்பவங்களில் கஞ்சா, புகையிலை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள், மாணவர்கள்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு ஈடுபடுகிறார்கள்.
இதற்காக இவர்கள் வீடு, கடைகள் முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதில் சென்று வழிப்பறி செய்கின்றனர். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க, தாங்கள் திருடி வந்த மோட்டார் சைக்கிள்களை சாலையோரங்களில் எங்காவது அனாதையாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். நீண்டநாட்களாக அந்த மோட்டார் சைக்கிள்கள் ஒரே இடத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. இதை நோட்டமிடும் திருட்டு கும்பல், அந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்து பேட்டரி, சக்கரங்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களை திருடிச்சென்று விடுகின்றனர். கடைசியில் அந்த மோட்டார் சைக்கிள் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.
பெரம்பூர் சிறுவள்ளூர் நெடுஞ்சாலை, வியாசர்பாடி பி.பி.ரோடு பி.எஸ்.என்.எல். குடியிருப்பு அருகே இதுபோன்று சக்கரங்கள் திருடப்பட்ட நிலையில் மோட்டார்சைக்கிள்கள் அனாதையாக நிற்கின்றன. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story