திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 403 பேர் கைது


திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 403 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 3:45 AM IST (Updated: 24 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட 403 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருவண்ணாமலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள நினைவு தூண் அருகில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், டாக்டர் எ.வ.வே.கம்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட 90 பேரை கைது செய்தனர்.

ஆரணி தொகுதி தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் ஆரணி அண்ணாசிலை அருகில் இருந்து நிர்வாகிகள் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று பழைய பஸ்நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகர செயலாளர் ஏ.சி.மணி, நகர பொருளாளர் பாலமுருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வி.ரவி, ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர்கள் ஜி.வெங்கடேசன், வெள்ளைகணேசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், தட்சிணாமூர்த்தி உள்பட 42 பேரை ஆரணி நகர போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசியில் பழைய பஸ்நிலையம் எதிரில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் டி.டி.ராதா, சுரேஷ்கமல், நந்தகோபால், ப.இளங்கோவன், நகர செயலாளர் கோட்டை அ.பாபு, பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம் புதிய பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், அண்ணாமலை, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள்முருகன், வில்சன் ரஜினிகாந்த் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தானிப்பாடி பஸ் நிலையம் முன்பு தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் பகல் 12 மணியளவில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் மு.பன்னீசெல்வம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, ஜெ.குமார், இருச சுந்தரம், எஸ். ஏசுதுரை, மா.ரகுபதி உள்பட 125 பேர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 83 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

போளூரில் தி.மு.க.வினர் 42 பேர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.கே.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் எவரெஸ்ட் நரேஷ்குமார், கோ.சண்முகம், கோ.தனசேகரன், சிம்லா சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு கைது செய்து மண்டபத்தில் வைத்தார். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 403 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story