சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்


சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:05 AM IST (Updated: 24 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் யார்?, எப்படி இறந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக விமான நிலைய போலீசாருக்கு மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பது தெரிந்தது.

வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி இறந்தாரா?

மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த வாலிபர் அங்கு சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. எனவே அவர், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரெயில் மோதி இறந்து இருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ஆனால் மெட்ரோ ரெயில் நிலையத்தின் உள்ளே யாரும் டிக்கெட் இல்லாமல் நடைமேடை பகுதிக்கு அத்துமீறி நுழைய முடியாது. அங்கு தண்டவாளத்தில் யாரும் இறங்காதபடி எந்தநேரமும் ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஒரு மணிநேரத்துக்கு மேல் யாராவது ரெயிலில் ஏறாமல் சுற்றிக்கொண்டிருந்தால் அவர்களை பிடித்து விசாரிப்பார்கள்.

முதல் சம்பவம்

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி மெட்ரோ ரெயில் நிலைய தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிணமாக கிடந்த வாலிபர் தொழிலாளியா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து, மெட்ரோ ரெயில் நிலைய தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டது இதுதான் முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story