எங்களை கேட்காமலேயே உறுப்பினர்களை நியமிப்பதா? காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு


எங்களை கேட்காமலேயே உறுப்பினர்களை நியமிப்பதா? காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 3:30 AM IST (Updated: 24 Jun 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தங்களை கேட்காமலேயே உறுப்பினரை நியமித்ததாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள குமாரசாமி, இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

பெங்களூரு,

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தங்களை கேட்காமலேயே உறுப்பினரை நியமித்ததாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி நீரை பங்கிட்டு கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1-ந் தேதி வெளியிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்

9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், இதேபோல் 9 பேர் கொண்ட ஒழுங்காற்றுக் குழுவுக்கும் தலா ஒரு பகுதி நேர உறுப்பினரை நியமிக்குமாறு தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி தமிழக, கேரள, புதுச்சேரி அரசுகள் தங்கள் உறுப்பினர்களை நியமித்த நிலையில், கர்நாடக அரசு மட்டும் தனது உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு ‘கெடு’ விதித்தும் கர்நாடகம் அதை பொருட்படுத்தவில்லை.

கர்நாடக உறுப்பினர்கள்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திலும், ஒழுங்காற்றுக் குழுவிலும் இடம் பெறுபவர்களின் பட்டியல் தொடர்பான அரசாணையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில், கர்நாடகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசின் நீர்வள இலாகா நிர்வாக செயலாளரும், ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக அரசின் நீர்வளத்துறை தலைமை பொறியாளரும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியிலும், ஒழுங்காற்றுக் குழு பெங்களூருவிலும் செயல்படும்.

குமாரசாமி கடும் எதிர்ப்பு

இந்த நிலையில், தங்களை கேட்காமல் மத்திய அரசு தானாகவே உறுப்பினர்களை நியமித்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வகுத்த வழிமுறைகளை ஏற்க முடியாது என்றும் கூறி அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குமாரசாமி கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு அதை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், ஒழுங்காற்றுக் குழுவிலும் கர்நாடகத்தின் சார்பில் இடம் பெறும் பகுதிநேர உறுப்பினர்களை தன்னிச்சையாக அறிவித்து இருக்கிறது. இது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசுக்கு கடிதம்

இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அவை கர்நாடகத்தின் நலனுக்கு எதிராக உள்ளன. அந்த வகையில் மத்திய அரசு சில தவறுகளை செய்து இருக்கிறது. இது சரி செய்யப்படவேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் உரிய வழிமுறைகளின்படி அமைக்கப்படவேண்டும் என்றுதான் கூறுகிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன். மேலும் பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை மீண்டும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளேன்.

அடுத்த கட்ட நடவடிக்கை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த இரு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் அவற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். என்றாலும் கர்நாடக நலனுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளுக்கும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராய்வோம்.

இதுகுறித்து முடிவெடுக்க நீர்வள நிபுணர் ஒருவரை நியமித்து இருக்கிறேன். கர்நாடக அரசின் தலைமை வக்கீலுடன் இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story