திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு


திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் சாமுண்டிபுரம் லட்சுமி தியேட்டர் ரோட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் அவசர கதியில் நடைபெற்று வருகிறது. கடை அமைக்க உள்ள இந்த சாலையின் வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும், இந்த ரோட்டில் மாலை நேரங்களில் தெருவோர காய்கறி வியாபாரமும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்த கடைகளுக்கு அதிக பெண்கள் காய்கறிகளை வாங்க இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த டாஸ்மாக் கடை இங்கு வந்தால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்கான முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Next Story