திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 295 பேர் கைது


திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 295 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:45 AM IST (Updated: 24 Jun 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 295 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்ற போது அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோர் சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க. அலுவலகத்தில் கூடினார்கள்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியபடி குமரன் ரோட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக கவர்னரை உடனடியாக திரும்ப பெறக்கோரியும், தி.மு.க.விற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முதல்-அமைச்சரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இதில் 10 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் பல்லடம் நால்ரோடு பகுதியில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அவை தலைவர் கே.என்.திருமூர்த்தி தலைமையில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொறுப்பாளர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் அங்கு கூடினார்கள். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ரோட்டில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் ஏராளமானோர் கூடினார்கள். பின்னர் அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஆர்.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர செயலாளர் மத்தீன் மற்றும் 7 பெண்கள் உள்பட மொத்தம் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் பகுதியில் மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தாராபுரம் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்த தி.மு.க.வினர் பலர் தாராபுரம் பூக்கடை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் தனசேகர் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் திருப்பூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 295 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story