கோவை கணபதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன


கோவை கணபதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன
x

கணபதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

கணபதி,

கோவை மாநகராட்சி 46-வது வார்டு கணபதி பழைய சத்தி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதில் சுமார் 80 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்தன. ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டின் அகலம் குறைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். எனவே அங்கு வசித்து வந்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை கீரணத்தம் பகுதியில் கட்டப்பட்ட புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த வீடுகளில் குடியேறினர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை 7 மணிக்கு கோவை மாநகராட்சி நகர திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், உதவி நகர திட்ட அலுவலர் ஜெயலட்சுமி, வடக்கு மண்டல உதவி கமிஷனர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகநாதன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் தென்னரசு, சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரன், அனில்குமார் உள்பட அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இடித்து அகற்றப்பட்டன

அதன்பிறகு 3 பொக்லைன் எந்திரங்கள், கிரேன் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பழைய சத்தி ரோடு பகுதியில் 200 அடி நீளத்துக்கும், 100 அடி அகலத்துக்கும் ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன. இதனால் போக்குவரத்து நெருக் கடி மற்றும் விபத்து ஏற்பட்டது. இந்த ரோடு வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலம் மைசூரு செல்ல முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் கணபதியில் இருந்து சரவணம் பட்டியை நோக்கி செல்லும் வாகனங்கள் இனி எளிதாக பழைய சத்தி ரோட்டை கடந்து செல்ல இயலும்.

அளவீடு செய்யப்படும்

தற்போது ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு உள்ளன. இது போல் சில தனியார் வணிக வளாகங் கள், குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. மாநகராட்சி வரைபடம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அளவீடு செய்யப்பட்டு, விரைவில் அவற்றையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தவிர சங்கனூர் ரோடு, மணியகாரம்பாளையம் ரோடு, பாரதியார் ரோடு, தாகூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், கணபதி பஸ் நிறுத்தத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளும்அகற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story