கோவையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது


கோவையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:33 AM IST (Updated: 24 Jun 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் தி.மு.க.வினர் நேற்றுக்காலை திரண்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினார்கள். பின்னர் தி.மு.க.வினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு ஊர்வலமாக செல்ல சென்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தி.மு.க. வினர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க.வினர் கைது

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட பொறுப் பாளர் முத்துசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, ஆ.நந்தகுமார், உமாமகேஸ் வரி, மற்றும் சண்முகசுந்தரம், நா.முருகவேல், மார்க்கெட் மனோகரன், கோட்டை அப்பாஸ், எஸ்.எம்.சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளை புறக்கணித்து விட்டு, தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். இதை கண்டித்து அவர் ஆய்விற்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கண்டனம்

தமிழகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல்-அமைச்சரை போல் அவர், நடந்து கொள்ளக்கூடாது என்று தி.மு.க. செயல்தலைவர் பல முறை கடிதம் கொடுத்தும், இது தொடர்ந்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story