சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து அகழி தோண்ட பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
மசினகுடியில் சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து அகழி தோண்ட பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மசினகுடி,
மசினகுடியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்க மசினகுடி- மாயார் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை பல்வேறு தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை இந்த இடத்தில் தொடர்ந்து புதைத்து வருவதால் தற்போது இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதலாக நிலத்தை ஒதுக்க வேண்டும் என மசினகுடி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில தனியார் நில உரிமையாளர்கள் சுடுகாட்டு நிலத்தின் சில பகுதிகளையும், அதனை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான ஏரி நிலத்தையும் ஆக்கிரமித்து அதனை சுற்றி பொக்லைன் எந்திரம் மூலம் அகழி தோண்டும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தனர். இதற்கு மசினகுடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொக்லைன் எந்திரம் பறிமுதல்
இந்த நிலையில் நேற்று காலை அங்கு சென்ற மசினகுடி கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் வருவாய் அலுவலர் ராமசுப்பு ஆகியோர் பணியை தடுத்து நிறுத்தியதுடன் அகழி தோண்டும் பணிக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பொக்லைன் எந்திரத்தை மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அகழி தோண்டிய சம்பந்தபட்ட தனியார் நில உரிமையாளர்கள் மீதும் புகார் அளித்தனர். இதுகுறித்து ஊட்டி தாசில்தார் தினேஷ் குமார் கூறுகையில் சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து புகார்கள் வந்ததையடுத்து கிரம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக பயன்படுத்திய எந்திரமும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுஉள்ளதாகவும் கூறினார். மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
Related Tags :
Next Story