கவிதை வானில் கருத்துச் சூரியன்
தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருப்பது கண்ணதாசன் பாடல்கள் ஆகும்.
தாலாட்டாக இருந்தாலும், தத்துவமாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கருத்து மோதலாக இருந்தாலும், மனக்குழப்பமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அத்தனை மனநிலைகளிலும் அப்படியே படம்பிடித்து காட்டுவது கண்ணதாசன் பாடல்கள்.
அவரது ஒவ்வொரு பாடல்களை கேட்டவர்களும் தங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே கருதுகிறார்கள். அதுவே அவரது பாடல்களின் வெற்றியின் ரகசியமாகும்.
கண்ணதாசன் கவிதை வார்த்தைகளின் குவியல்கள் அல்ல; அனுபவங்களின் பிழிவு.
மகாகவி பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசனுக்கும் அடுத்த இடத்தை காலம் கவியரசர் கண்ணதாசனுக்கு கொடுத்தது.
குற்றால அருவியில் குளிப்பது போல் ஒரு சுகத்தையும் இளந்தென்றல் காற்று இதமாக வந்து தழுவும் போது ஏற்படுகிற சிலிர்ப்பையும், கண்ணதாசன் தனது பாடல்களில் ஏற்படுத்தினார். தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை தன் பாட்டுக்குள் வைத்தவர் என்று தமிழறிஞர்களால் பாராட்டப்பட்டார்.
ஓசை நயம், உணர்ச்சி சிறப்பு வெல்லும் சொல்லாட்சி, எல்லோருக்கும் புரிகிற எளிமை என்று அனைத்து சிறப்புக்களையும் கொண்டிருந்ததால் அவரது பாடல்களும், கவிதைகளும் உரைநடையும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. கற்பனையை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டாரே தவிர அனைத்தையும் அனுபவத்தின் பிழிவுகளை அடிப்படையாய் வைத்தே அவர் எழுதினார்.
ஒரு சமயம், மத்தியிலே நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரசியல் சூழ்நிலை காரணமாக, செய்யாத தவறுக்காக பதவியைத் துறந்து விட்டு விமானத்தில் இருந்து இறங்கி சோகத்தோடு, காரிலே வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவரது மன உளைச்சலுக்கு மருந்து போட்டது, ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாட்டுத்தான்.
இந்தத் திரைஉலகம் இனி மேல் நமக்குச் சரிப்பட்டு வராது என்று சொந்த ஊருக்குப் பயணப்பட்ட கவிஞர் வாலியை போகாதே என்று கோடம்பாக்கத்திற்கு மீண்டும் கூட்டி வந்து சேர்த்தது கவியரசரின், ‘மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா. உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற பாடல்தான்.
‘ஆண்டி கையில் ஓடிருக்கும். அது கூட உனக்கில்லை’ என்று காமராஜரை ஏற்றிப் போற்றிய கண்ணதாசன், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மீண்டும் சேருவதற்கு காரணமாக அமைந்தது, ‘அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி. வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ என்ற பாடல். அந்த பாடலை கேட்ட காமராஜர், கண்ணதாசனை தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார்.
பெருந்தலைவர் காமராஜர் எப்போதும் எங்கேயும் அதிகமாகப் பேசமாட்டார். தகுதியில்லாத எவரையும் புகழ்ந்தும் பேசமாட்டார். ஒரு முறை கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில், ‘காட்டுக்கு ராஜா சிங்கம்ன்னா, நல்ல பாட்டுக்கு ராஜா கண்ணதாசன் தான்’ என்று காமராஜர் பாராட்டிப் பேசியது, கண்ணதாசனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மகுடமாகும்.
திரைஉலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்திட்ட எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், கண்ணதாசனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காலத்திலே கூட எனக்கு கண்ணதாசன் பாட்டுத்தான் வேண்டுமென்று இருவருமே கேட்டுப் பெற்ற வரலாறுகள் உண்டு.
ஆயுட்காலம் வரை நீங்கள் தான் அரசவைக் கவிஞர் என்று முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு உத்தரவையே பிறப்பித்தார். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றல் கவிஞரே வருக என்று சிவாஜிகணேசன் பாராட்டி உச்சி முகந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அண்ணனிடம் சென்று பணம் கேட்டு அது கிடைக்காத சூழ்நிலையில் எழுதியதுதான், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற பாட்டு.
உங்களுடைய கடைசி ஆசை என்ன என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டபோது, ‘காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா என்ற பாடலை தனிமையில் கேட்டு விட வேண்டும்’ என்பது தான் எனது தாகம் என்று பதிலளித்தார்.
‘உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்’ என்று வாழ்க்கையின் யதார்த்த நிலையை பாடலில் வடித்தார். பட்டினத்தார் பாட்டில் உள்ள அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே என்ற பாடலின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு,
‘வீடுவரை உறவு... வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை... கடைசி வரை யாரோ?’ என்று பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பாட்டு எழுதிய மேதை.
கண்ணதாசன் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி சிக்கல்களில் பலமுறை மாட்டிக் கொண்டதுண்டு. ஆனால் அதற்காக ஒரு போதும் அவர் வருந்தியதில்லை. ‘போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்’ என்று சூளுரைத்து நின்றார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை, இனி கண்ணதாசன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் கண்ணதாசன், ‘சொன்னது நீதானா சொல்! சொல்! சொல் என் உயிரே’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர் கவியரசர்.
பாடல்களைப் போலவே கவிதைகளிலும் கொடி கட்டி பறந்தவர் கண்ணதாசன். பிரதமர் நேரு மறைந்து உலகமே கண்ணீர் வடித்தபோது, ‘சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதா’ என்று தானும் அழுது மற்றவர்களையும் அழவைத்தார்.
‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று எழுதி, ஒரு தனிப்பாட்டையும் திரைப்படப் பாடலுக்கு மேலாகக் கொண்டு நிறுத்திய பெருமையும் கண்ணதாசனுக்கே உரியது.
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற கவிஞரின் வைரவரிகள் எத்தனை நிதர்சனமானவை. இதோ கண்ணதாசன் பாட்டு அவர் எழுதியது போல் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறதே...!
இன்று (ஜூன் 24-ந்தேதி) கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்.
- கவிஞர் ரவிபாரதி

Related Tags :
Next Story