தமிழகத்தில் சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் வரும் துரைமுருகன் பேச்சு


தமிழகத்தில் சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் வரும் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 25 Jun 2018 3:00 AM IST (Updated: 25 Jun 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் வரும் என்று காயல்பட்டினத்தில் நடந்த விழாவில் தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசி

ஆறுமுகநேரி, 

தமிழகத்தில் சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் வரும் என்று காயல்பட்டினத்தில் நடந்த விழாவில் தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார்.

கருணாநிதி பிறந்தநாள் விழா

காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சீதக்காதி திடலில் நடந்தது. நகர செயலாளர் கே.ஏ.எஸ்.முத்து முகம்மது தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் எஸ்.ஏ.கே.ஜலீல் வரவேற்றார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், நகர பொருளாளர் தாஜிதீன், நகர அவைத்தலைவர் கிதர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.சாகுல்ஹமீது, முன்னாள் இளைஞரணி துணை செயலாளர் கதிரவன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

டிசம்பர் மாதம் தேர்தல்

இந்தியாவை இந்து நாடாக்க பா.ஜனதா பார்க்கிறது. அது தி.மு.க.வின் கடைசி தொண்டன் இருக்கும் வரை நடக்காது. தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் கண்டிக்கத்தக்கது. மேலும் இன்று வரை பலரை வீடுகளுக்குள் புகுந்து கைது செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இது அவருக்கு முதல்வர் பதவிக்குரிய தகுதி இல்லை என்பதை காட்டுகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத்துக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் வரும். வரும்காலங்களில் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏழை எளிய மக்களுக்கு தையல் எந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், ஏ.கே.பூபதி, இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், நகரசபை முன்னாள் கவுன்சிலர் அஜ்வாது உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ஆர்.எஸ்.கணபதி நன்றி கூறினார்.


Next Story