தஞ்சையில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி நடத்த திட்டம்


தஞ்சையில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி நடத்த திட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:15 AM IST (Updated: 25 Jun 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சியை தஞ்சையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நேற்று அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சஞ்சய்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கைவினை கலைஞர்களால் 1819-ம் ஆண்டு முதல் கலைத்தட்டு தயாரிக்கும் பணி தஞ்சையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இந்த கலைத்தட்டின் பெருமை பரவியுள்ளது. பல கலை நுணுக்கங்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த கலைத்தட்டு பார்வையாளரின் கண்களை கவரும். இந்த தட்டு தஞ்சைக்கு தனி அடையாளத்தை காட்டி வருகிறது.

கலைத்தட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 81 பேருக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குவதற்காக புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 60 பேருக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப்போது 21 கைவினை கலைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்துள்ளது. அந்த அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் தனிமுத்திரை வழங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பதிவகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இந்த தனி முத்திரையை பயன்படுத்த முடியும். தஞ்சையில் இருந்து தயாரிக்கப்படும் கலைத்தட்டுக்கு மட்டும் இந்த முத்திரை கிடைக்கும்.

மற்ற ஊர்களில் இருந்து கலைத்தட்டு தயாரித்து தஞ்சை கலைத்தட்டு என்ற பெயரை பயன்படுத்துவதை தடுப்பதற்கு இந்த தனிமுத்திரை உதவும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்களும் தனிமுத்திரையை பயன்படுத்தலாம்.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே தஞ்சை ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலை, வீணை போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் தஞ்சை கலைத்தட்டுக்கு மட்டும் கிடைத்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கலைத்தட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மத்தியஅரசு கொள்கை முடிவு எடுத்து விமான நிலையங்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் தஞ்சை ஓவியம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.

கைவினை பொருட்கள் மட்டுமின்றி காஞ்சிபுரம் பட்டு வேட்டி, கோவை கோரா காட்டான் சேலைகளும் சுற்றுலா பயணிகளை கவரும். இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற அனைத்து பொருட்களை ஒரே இடத்தில் இடம் பெறும் வகையில் தஞ்சையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டு வருகிறோம். தனிமுத்திரையை வடிவமைத்து பதிவு செய்து கொடுத்த மத்திய ஐவுளித்துறை அமைச்சகத்தின் கைவினை பொருட்களின் மேம்பாட்டு ஆணையருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story