உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க பா.ஜனதா நடவடிக்கை


உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க பா.ஜனதா நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2018 4:00 AM IST (Updated: 25 Jun 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இருந்தே உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க பா.ஜனதா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.

பனைக்குளம்,

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாகவும், அதிகமான வர்த்தகம் கொண்ட மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன.

இந்த நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள கடற்படை விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற இம்மாவட்ட மக்கள் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் விமான நிலையம் அமைத்திட உச்சிப்புளி விமான நிலையத்தின் அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமான நிலையத்தை சுற்றிலும் அதிகமான தென்னை மரங்களும், விவசாய நிலங்களும் இருப்பதால் அவற்றை அழிக்க தென்னை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனிடையே சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிடம் பயணிகள் விமான நிலையம் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அன்று முதல் பரிசீலனையில் இருந்த இந்த திட்டம் தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டுமெனில் விமானம் மூலம் சென்னை அல்லது திருச்சிக்கு வந்திறங்கி பின்பு ரெயில் மூலம் வரவேண்டிய நிலை இருந்து வருகிறது. அதே சமயம் அவர்கள் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு ஊருக்கு வரும் நிலை இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டத்தில் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன. இங்கு வருவதற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயிடம் நான் (முரளிதரன்) தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்த காலத்தில் விமானத்துறை மற்றும் போக்குவரத்து துறை இணை மந்திரி ஸ்ரீபட்நாயக்கிடம் உச்சிப்புளியில் உள்ள விமான தளம் அருகில் பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுத்தேன்.

அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபம் திறப்பு விழாவுக்கு வந்த அப்போதைய மத்திய மந்திரியும், தற்போதைய துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடுவிடமும் உச்சிப்புளி விமான நிலையம் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று உறுதியாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதேபோல மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரிடமும் இதுதொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவுக்கு வந்திருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியிடமும் இதுகுறித்து விரிவாக விளக்கினேன். அப்போது அவர் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் தனக்கு மிகுந்த அக்கறை உள்ளதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் தான் தேசிய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நமது மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நிறைவேற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக் உடனிருந்தார். 

Related Tags :
Next Story