பணம் எடுத்ததாக செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி; கடையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு திருட்டு


பணம் எடுத்ததாக செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி; கடையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு திருட்டு
x
தினத்தந்தி 25 Jun 2018 3:15 AM IST (Updated: 25 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பணம் எடுத்ததாக செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் உரிமையாளர் கடைக்கு சென்றுபார்த்தபோது மேற்கூரையை சேதப்படுத்தி ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வ.உ.சி. சாலையில் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். நேற்றுகாலை அவருடைய மனைவியின் செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் ரூ.500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து அவர், இதுகுறித்து அவருடைய மகனிடம் காண்பித்து ஏ.டி.எம். கார்டு எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார்.

அது கடையில் உள்ளது என்ற விவரம் அறிந்து அங்கு சுப்பிரமணியன் மற்றும் அவரு டைய மகன் சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை சேதப்படுத்தப்பட்டு திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்றுபார்த்தபோது கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து சுப்பிரமணியன் செல்போனுடன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். அப்போது மீண்டும் செல்போனுக்கு வங்கி கணக்கில் ரூ.2000-ம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால்அதிர்ச்சி அடைந்த போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story