மரிக்குண்டு ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


மரிக்குண்டு ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2018 3:00 AM IST (Updated: 25 Jun 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் மரிக்குண்டு, வீர சின்னம்மாள்புரம், எம்.சுப்புலாபுரம், எரதிம்மக்காள்பட்டி, பழனித்தேவன்பட்டி, ஜெ.ஜெ.நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு குன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் வைகை ஆறு வறண்டு போய் விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தபட்டது. மேலும் இங்குள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் வள்ளல் நதி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை. கடந்த 20 நாட்களாக குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்று தோட்டங்களில் விலை கொடுத்து தண்ணீர் எடுத்து வருவதாக பெண்கள் புகார் கூறுகின்றனர். எனவே வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மரிக்குண்டு ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story