சீசன் களைக்கட்டியது: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சீசன் களைக்கட்டி உள்ளதால் குற்றாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தென்காசி,
சீசன் களைக்கட்டி உள்ளதால் குற்றாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குற்றாலம் சீசன்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டும்.
குற்றாலத்தில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளித்து விட்டு செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சீசன் சரியாக கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் தொடங்கியது. அன்று முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் குற்றாலத்தின் சீசன் களைக்கட்டி உள்ளது.
இந்த நிலையில் குற்றாலத்தில் நேற்றும் சீசன் அருமையாக இருந்தது. குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான வெயில் அடித்தது. சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்நேற்று விடுமுறை நாள் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டியதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குறிப்பாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகையால் நேற்று குற்றாலத்தில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றாலத்தில் கடை வியாபாரிகளுக்கு நேற்று வியாபாரம் படுஜோராக இருந்தது.