கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீஸ்காரர்


கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 25 Jun 2018 3:06 AM IST (Updated: 25 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ்காரர் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பூர்,

சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சிவலிங்கம் (வயது 37). இவர், நேற்று காலை பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கையில் கத்தியுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் கூச்சலிட்டபடி சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீஸ்காரர் சிவலிங்கம், தனது மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் இருவரையும் விரட்டிச்சென்றார்.

பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் அவர்களை மடக்கினார். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிள்களை கீழே போட்டு விட்டு, தப்பி ஓடமுயன்றனர். அப்போது அவர்கள், தங்களிடம் இருந்த கத்தியால் சிவலிங்கத்தின் கை விரலில் வெட்டினர். இதனால் விரலில் இருந்து ரத்தம் கொட்டியது.

ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் போலீஸ்காரர் சிவலிங்கம், ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடினார். அதற்குள் அந்த வழியாக ரோந்து வந்த செம்பியம் போலீசார், அந்த வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், கொடுங்கையூரைச் சேர்ந்த பரத்ராஜ் (21), அஜித் (19) என்பதும், இவர்கள் இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் மீது எம்.கே.பி.நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழப்பறி கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

சினிமா பாணியில் பட்டப்பகலில் நடுரோட்டில் கொள்ளையர்களை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்காரர் சிவலிங்கத்தை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வ நாதன் வெகுவாக பாராட்டினார்.

Next Story