காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: கர்நாடக அரசு எச்சரிக்கையுடன் செயல்படவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு


காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: கர்நாடக அரசு எச்சரிக்கையுடன் செயல்படவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Jun 2018 4:00 AM IST (Updated: 25 Jun 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட வி‌ஷயத்தில் கர்நாடக அரசு எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட வி‌ஷயத்தில் கர்நாடக அரசு எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

மக்கள் நன்கு அறிவார்கள்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை குறித்த புத்தகத்தை வெளியிட்டு மக்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா சார்பில் அந்த மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தபோது, நாட்டில் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி இருந்தது. இன்று 20 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஊழல் எவ்வாறு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மோடி ஆட்சியில் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

நல்ல மரியாதை

நமது நாடு சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல மரியாதை கிடைத்துள்ளது. மோடியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேருகின்றன. பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிக்கொள்ளும் கட்சிகள் கூட மோடியை வீழ்த்த ஒன்று சேருகின்றன.

ஆனால் இதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பா.ஜனதாவுக்கு மக்கள் பலம் உள்ளது. அத்துடன் தெய்வ பலமும் இருக்கிறது. சட்டமன்ற தேர்தலின்போது குமாரசாமி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதை நம்பி மக்கள் குமாரசாமி கட்சிக்கு 37 இடங்கள் கொடுத்தனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குமாரசாமி நிறைவேற்ற வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

எங்களுக்கு புரியவில்லை

காவிரி பிரச்சினையில் நாங்கள் கர்நாடக அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் வி‌ஷயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசும் எச்சரிக்கையாக செயல்படவில்லை. கர்நாடக விவசாயிகளுக்கு அநீதி ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை.

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டாம். மந்திரி ஜமீர்அகமதுகான் குழப்பம் விளைவிக்கும் கருத்துகளை தெரிவித்து, கர்நாடகத்தில் அமைதியை குலைக்க முயற்சி செய்கிறார். ஒரு நல்ல நோக்கத்திற்காக எனது ஆட்சி காலத்தில் ஹஜ் பவனுக்கு நிலம், நிதி ஒதுக்கி கொடுத்தேன். அத்தகைய கட்டிடத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவது கண்டனத்துக்கு உரியது.

தவறை மூடிமறைக்க...

வருமான வரி சோதனை குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார், தன்னிடமும் டைரி உள்ளதாக கூறி இருக்கிறார். தனது தவறை மூடிமறைக்க அவர் இவ்வாறு பொய் தகவல்களை கூறுகிறார். டைரி இருந்தால் அதை உடனே வெளியிட வேண்டியது தானே.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story