விமானப்படையில் ஏர்மேன் வேலை


விமானப்படையில் ஏர்மேன் வேலை
x
தினத்தந்தி 25 Jun 2018 12:52 PM IST (Updated: 25 Jun 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்' (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், ‘குரூப்-ஒய்' (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

கல்வித் தகுதி:

குரூப் எக்ஸ், விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 (10+2 முறையில்)/இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பிரிவில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குரூப்-ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 14-7-1998 மற்றும் 26-6-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி:

குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடையளவு குறைந்தபட்சம் 55 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத் திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை தேவையான அளவுக்குள் இருக்கிறதா? என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு கால பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு செய்ய முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 3-7-2018 முதல் 24-7-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 13 முதல் 16-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

இது பற்றிய விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதள முகவரிகளைப் பார்க்கலாம். 

Next Story