வேதியியல் துறை படிப்புகள் வழங்கும் வளமான எதிர்காலம்!


வேதியியல் துறை படிப்புகள் வழங்கும் வளமான எதிர்காலம்!
x
தினத்தந்தி 25 Jun 2018 1:16 PM IST (Updated: 25 Jun 2018 1:16 PM IST)
t-max-icont-min-icon

ரசாயனப் பிரிவின் பயன்பாடுகளை பல்வேறு அறிவியல் படிப்புகளாக படிக்க முடியும்.

றிவியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது வேதியியல் பிரிவு. உயிர்கள் தோன்றியது ரசாயன சேர்க்கையினால்தான். உயிர்களின் இயக்கமும் பல்வேறு ரசாயன செயல்பாடுகளின் பின்னணியில்தான் நடக்கின்றன. பால், பழங்கள் முதல் இறைச்சி வரை உள்ள அனைத்து உணவுகளிலும் ரசாயன கலவையாக கலந்திருக்கும் வேதிப்பொருட்களும், இதர சத்துக்களுமே உடலின் அத்தியாவசிய இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நாம் பயன் படுத்தும் சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் முதல் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ரசாயனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரசாயனப் பிரிவின் பயன்பாடுகளை பல்வேறு அறிவியல் படிப்புகளாக படிக்க முடியும். வளமான எதிர்காலத்திற்கு வாய்ப்பு வழங்கும் வேதியியல் துறை படிப்புகளைப் பற்றி இங்கு காண்போம்...

ஒரு வேதிப்பொருள் மற்றொரு வேதிப்பொருளுடன் கலந்தால் என்ன நடக்கும், வேதிப் பொருட்கள், மற்ற பொருட்களின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பது போன்ற அடிப்படைகளை அனைத்து ரசாயன அறிவியல் படிப்புகளிலும் கற்றுக்கொள்ளலாம். இதை தெளிவுற அறிந்து கொண்டவர் வேதி நிபுணராக (கெமிஸ்ட்) உயரலாம். நீங்களும் ரசவாதங்களை திறம்பட கற்று சிறந்த வேதியியல் நிபுணராக மாற விரும்புகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

பிளஸ்-2விற்கு பிறகு...

இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ்-2 படித்தவர்கள் இளங்கலை வேதியியல் அறிவியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். என்ஜினீயரிங் பாடப்பிரிவிலும், தொழில்நுட்ப படிப்பிலும் வேதியியல் பாடப்பிரிவு உள்ளன. பி.இ., பி.டெக் போன்ற கெமிக்கல் என்ஜினீயரிங் பாடங்களை தேர்வு என்ஜினீயரிங் கவுன்சிலிங் அடிப்படையில் தேர்வு செய்து விரும்பிய கல்லூரிகளில் படிக்கலாம்.

இளநிலை படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை வேதியியல் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். முதுநிலை படிப்புகளிலும் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள், பெல்லோஷிப் மற்றும் பிஎச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்புகளை படிக்கலாம்.

இளநிலை படிப்புகள் :

பி.எஸ்சி. ஹெமிஸ்ட்ரி, பி.எஸ்சி. ஆக்சூரியல் சயின்ஸ், பேச்சிலர் ஆப் காமெர்ஸ் இன் ஆக்சூரியல் சயின்ஸ், பி.எஸ்சி. (அனலைட்டிகல் மெத்தட்ஸ் இன் கெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி), பி.எஸ்சி. அப்ளைடு கெமிஸ்ட்ரி போன்றவை முக்கியமான வேதியல் பாடப்பிரிவுகளாகும்.

என்ஜினீயரிங் துறையில் கெமிக்கல் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி, புட் புராசஸிங் அண்ட் இன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி போன்ற பாடப்பிரிவுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த படிப்புகளுக்கு நல்ல எதிர்காலமும் உள்ளது.

விண்வெளி சார்ந்த துறையில் பயணிக்க விரும்பு பவர்கள் ஆஸ்ட்ரோ கெமிஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்யலாம். விண்வெளியில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றுமுள்ள பருப்பொருட்களில் உள்ள வேதியியல் கூட்டுச்சேர்மங்கள் பற்றி இந்த படிப்பில் படிக்கலாம். அணுசக்தி துறையிலும் வேதியியல் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும். நியூக்ளியர் கெமிஸ்ட்ரி பாடத்தை தேர்வு செய்தால் அணுக்கரு வேதிப்பொருட்கள் மற்றும் செயல்பாடுகள், அதன் ஆற்றல் பற்றி படிக்கலாம். இவ்விரு துறைகளும் சமீபகாலமாக ஏறுமுகம் கொண்ட துறைகளாக இருப்பதால் பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும்.

புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் போன்றவை இப்போது உயிர்ச்சூழலுக்கு பெரும் சவால்களாக அமைந்துள்ளன. என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்பவர்கள் இது பற்றி விரிவாக படித்து, சுற்றுச்சூழல் துறையில் வேதியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்.

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்

இளநிலை படிப்புகளில் இதுபோன்ற பல்வேறு படிப்புகளை தேர்வு செய்பவர்கள், முதுநிலை படிப்புகளில் மேலும் பல்வேறு உட்பிரிவுகளில் வேதியியல் உலகை கற்றுத் தெளியலாம். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அக்ரோகெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி போன்றவை தொழிற்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘பிலாசபி இன் அப்ளைடு கெமிஸ்ட்ரி’, ‘பிலாசபி இன் கெமிஸ்ட்ரி’, ‘பிலாசபி இன் ஜியோ என்ஜினீயரிங்’, ‘இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி’, ‘அனலைட்டிகல் கெமிஸ்ட்ரி’, ‘டிரக் கெமிஸ்ட்ரி’, ‘பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி’, ‘பிசிகல் அண்ட் மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி’ உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் முதுநிலை படிப்புகளை படிக்கலாம். இதே துறைகளில் எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

வேலைவாய்ப்புகள்

வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பட்டப்படிப்பு நிறைவு செய்தது முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, தங்கள் தகுதிக்கேற்ற கவுரவமான பணியையும், ஊதியத்தையும் பெற்றுத் தரக்கூடியவை வேதியியல் படிப்புகள்.

வேதியியல் படிப்பில் பிஎச்.டி. (முனைவர்) பட்டம் பெறுபவர்கள் பல்வேறு ஆராய்ச்சி பிரிவுகளிலும் உயர் அந்தஸ்திலான பதவியை பெறலாம். வேதியியல் ஆய்வகங்கள், மருந்து ஆய்வுக்கூடங்கள், மருந்து தயாரிப்பகங்கள், பொறியியல் ஆய்வுக்கூடங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு கூடங்கள் போன்றவற்றில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

முதுநிலை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களிலும், பயிற்சி மையங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு. இளநிலை படிப்பு படித்தவர்கள் பல்வேறு வேதித் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உதவியாளர்களாக சேர்ந்து வேதி நிபுணராக உயரலாம்.

வேதியியல் பணி என்பது ஆய்வகத்திற்குள் அமர்ந்து இரு வேதிப் பொருட்களை ஒரே குடுவையில் கலக்கிக் கொண்டிருப்பதல்ல. வேதிச் சேர்மங்களின் கலவையால் உருவாகும் புதுமைகளை சமூக பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றுவது வேதி நிபுணரின் வேலை, பிரிக்க முடியாததை பிரிக்கவும், சேர்க்க முடியாததை சேர்க்கவும் வேதிப் பொருட்களை பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். தங்கள் கண்டுபிடிப்புகளால் மருத்துவம், உணவுத்துறை, விண்வெளித்துறை அனைத்திலும் புதுமைகளை படைக்க வேதி நிபுணரால் முடியும். நீங்களும் வேதியியல் நிபுணராக விரும்பினால் இவற்றில் உங்களுக்கு விருப்பமான வேதிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம்! 

Next Story