விண்வெளி குப்பையை அழிக்கும் லேசர் தொழில்நுட்பம்!
செயற்கைக்கோள்களில் பல செயலிழந்து போனபின்னர் அவை விண்வெளியிலேயே மிதக்கத் தொடங்கிவிடுகின்றன. அவற்றைத்தான் விண் வெளிக்குப்பை என்று சொல்கிறார்கள்.
குரங்கிலிருந்து தோன்றிய ஆதி மனிதன் காடுகளில் தன் வாழ்க்கையைத் தொடங்கினான். நெருப்பு, கல்லால் ஆன கூறிய ஆயுத வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு என மெல்ல மெல்ல தொடங்கியது மனிதனின் நாகரிக வளர்ச்சி.
அதன் காரணமாக, காடு, மலை, கடல் என பல்வேறு வகையான நிலங்களில் உணவு மற்றும் செல்வத்தை தேடி தன் ஆளுமையை விரிவு படுத்தினான். முக்கியமாக, தனக்குத் தேவையான உணவு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்களை உற்பத்தி செய்ய தனக்கு மட்டுமே ஆன வயல்வெளியை உருவாக்கினான் மனிதன்.
மிகவும் ஆச்சரியமாக, புல் பூண்டு எதுவுமே வளராத ஆனால் சிலவகை வறட்சி தாங்கும் தாவர, மர வகைகள் மட்டுமே வளரும் பாலைவனத்தையும் தான் வாழும் இடமாக வெற்றிகரமாக மாற்றி உலகின் மொத்த நிலப்பரப்பிலும் கோலோச்சி வருகிறான் மனிதன்.
சுவாரசியமாக, தமிழர்கள் நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு உருவாக்கிய பாகுபாடு ‘நிலத்திணை’ என்று அழைக்கப் படுகிறது. தமிழர்கள் நிலத்தை, குறிஞ்சி (மலையும் மலைசார்ந்ததும்), முல்லை (காடும் காடு சார்ந்ததும்), மருதம் (வயலும் வயல் சார்ந்ததும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்ததும்) என்னும் நான்கு வகையாக பிரித்துள்ளனர். மேலும், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்று ஐந்தாவது நிலம் உருவானது என்று பதிவு செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிலப்பரப்புகளிலும் குப்பை போட்டு அவை அத்தனையையும் முற்றிலுமாகப் பாழாக்குவதில் மனிதனுக்கு நிகர் மனிதன்தான்!
தற்போது, கற்பனைக்கு எட்டாத ஒரு இடத்திலும் மனிதன் குப்பைகளைப் போட்டு, அந்த குப்பையின் அளவு மிகவும் அதிகமாகி, அதனால் உலகத்துக்கு பேராபத்து ஏற்படப்போகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அது எந்த இடம் தெரியுமா? மனிதன் அடுத்ததாக ஆக்கிரமிக்க படுவேகமாக முயன்று வரும் ‘விண்வெளி’தான் அது!
என்னது, விண்வெளியிலும் மனிதன் குப்பையைப் போட்டிருக்கிறானா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆமாம், அது முற்றிலும் உண்மைதான்.
எப்படி என்றால், தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்குள் ஏவப்பட வேண்டும்.
அத்தகைய செயற்கைக்கோள்களில் பல செயலிழந்து போனபின்னர் அவை விண்வெளியிலேயே மிதக்கத் தொடங்கிவிடுகின்றன. அவற்றைத்தான் விண் வெளிக்குப்பை என்று சொல்கிறார்கள். சுவாரசியமாக, மிகவும் பெரிய அளவுகொண்ட சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண் வெளியில் பூமியைச் சுற்றி வருவதாகக் கணித்துள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று.
விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய செயற்கைக்கோள் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்ட மனிதனின் அடுத்த புகலிடங்களாக மாறக்கூடிய கிரகங்களைத் தேடிச் செல்லும் விண்வெளி கப்பல்கள் உள்ளிட்டவை அவற்றின் இலக்கை அடைய விண்வெளி குப்பைகள் பெரும் தடையாகவும் மாறக்கூடும் என்று அஞ்சப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்மாதிரியான எதிர்கால விண்வெளி ஆபத்துகளை தவிர்க்க, சிக்கல்களை சரி செய்ய, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விண்வெளி குப்பைகளை சூடாக்கி அதன்மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்துவிடும் மிகப்பெரிய விண்வெளி லேசர் (gigantic space laser) ஒன்றை உருவாக்கி வருவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
கேட்பதற்கு, ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கற்பனைத் தொழில்நுட்பக் கருவிபோலத் தோன்றும் இந்த விண்வெளி லேசர் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காசஸ்மோஸ் (Roscosmos)-ன் ஒரு அங்கமான ப்ரிசிஷன் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம்ஸ் (Precision Instrument Systems, PIS)-ன் விஞ்ஞானிகள் விண்வெளி லேசரை மிக வேகமாக உருவாக்கி வருகின்றனர்.
தற்போது, விண்வெளி குப்பை களைக் தேடிக் கண்டறியும் திறன்கொண்ட, மூன்று மீட்டர் நீளம்கொண்ட ஆப்டிகல் டெலஸ்கோப்பாக இருக்கும் தொடக்கநிலைக் கருவியே, (laser ablation எனும் தொழில்நுட்பம் மூலமாக) விண்வெளி குப்பைகளை சூடாக்கி பின்னர் அவற்றை ஆவியாக்கி விடும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் தவிர்த்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளும் விண்வெளி லேசர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் செய்திகள் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story