மூளையின் நரம்பியல் வலையமைப்பு கொண்ட செயற்கை நுண்ணறிவு!
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் சமீப காலங்களின் கற்பனைக்கெட்டாத பல மாயாஜாலங்களை நிகழ்த்தியுள்ளன.
இந்த உலகம் மனிதர்களால் நிரம்பி வழிகிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வளர்ச்சியின் காரணமாக பிறப்பு விகிதம் அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் மாறியதே மக்கள்தொகையின் பெருக்கத்துக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
ஆனால், அதிகரித்துவரும் மக்கள் தொகையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளான மருத்துவம் போன்றவற்றை பூர்த்தி செய்ய மனித சக்தி போதாமல், சமீபத்திய தொழில்நுட்பக் குழந்தையான செயற்கை நுண்ணறிவின் துணையை விஞ்ஞானிகள் நாடி வருகின்றனர் என்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.
மனித மூளையின் இயக்கங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, அதன் திறன்களை அப்படியே பிரதிபலிக்கக்கூடிய வண்ணம் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் சமீப காலங்களின் கற்பனைக்கெட்டாத பல மாயாஜாலங்களை நிகழ்த்தியுள்ளன.
உதாரணமாக, புற்றுநோய் உள்ளிட்ட சில ஆபத்தான நோய்கள் யார் யாருக்கு வரும் என்பதை மனித மருத்துவர்களை விட மிகத் துல்லியமாகவும், மிகச்சரியாகவும் கணிப்பது தொடங்கி சில நோய்களை மிகவும் தொடக்கநிலையிலேயே மிகச்சரியாக கண்டறிந்து சொல்வதிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனித வல்லுனர்களை தோற்கடித்து சாதனை செய்து வருகின்றன.
இவை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மிகச்சரியாக மேற்கொள்ளக் காரணம் மெய்நிகர் நரம்புகளால் (virtual neurons) ஆன நியூரல் நெட் (neural net) மற்றும் அவற்றை இயக்கும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்கள் (artificial intelligence algorithms) என்பது குறிப்பிடத்தக்கது.
புத்திக்கூர்மை இல்லாத சில மனிதர்களை நாம் முட்டாள்கள் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், முட்டாள்களின் மூளையை பிரதி பலிக்கக்கூடிய செயற்கை மூளையைக் கூட புத்திசாலி விஞ்ஞானிகளால் இன்னும் வடிவமைக்க/உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால் நம்முடைய மூளைதானே அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று மனித மூளையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மனித மூளையின் திறன்கொண்ட கம்ப்யூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் ஐ.பி.எம் நிறுவன பொறியியலாளர்கள், மனித நரம்புகளை பிரதிபலிக்கும் நரம்பியல் வலையமைப்பு (physical neural network) ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இந்த நரம்பியல் வலையமைப்பில் செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் ஒன்றை பரிசோதித்துப் பார்த்தபோது, தற்போது புழக்கத்தில் உள்ள பிற நரம்பியல் வலையமைப்பு போலவே புதிய வலையமைப்பும் இயங்கியது முதலில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஒரு குறிப்பிட்ட செயலை செய்துமுடிக்க தற்போதைய நரம்பியல் வலையமைப்புகள் எடுத்துக்கொண்ட ஆற்றலை விட நூறு மடங்கு குறைவான ஆற்றலின் உதவியுடன், அதே செயலை இந்த புதிய வலையமைப்பானது திறம்பட செய்து முடித்தது தெரியவந்துள்ளது.
இத்தகைய புதிய நரம்பியல் வலையமைப்புகொண்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் மிகவும் குறைவான ஆற்றலில் பிழைகளே இல்லாத மிக அதிகமான கம்ப்யூட்டர் கணக்குகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த புதிய ஆய்வில், இரண்டு வகையான மெய்நிகர் நரம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. ஒன்று, துரிதமாக கணக்குகளை மேற்கொள்ளும் மனித நரம்புகளின் அடிப் படையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மெய்நிகர் நரம்புகள். மற்றொன்று, நீண்ட நாள் நினைவுகளை சேமித்து வைக்கும்படி வடிவமைக்கப்பட்ட நரம்புகள் ஆகும்.
மனித நரம்புகள் மற்றும் மூளையின் இயக்கங்கள் தொடர்பான, மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தகவல்கள் மட்டுமே அறியப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், மனித மூளை இயங்கும் விதத்தை அப்படியே கம்ப்யூட்டர்களுக்குள் செலுத்தி, மனித மூளையை பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகள், தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளனர் ஐ.பி.எம் ஆய்வாளர்கள்.
அதுமட்டுமல்லாமல், பெருகிவரும் தொழில்நுட்ப கருவிகள் மிக அதிகமான ஆற்றலை உறிஞ்சிவரும் தற்போதைய சூழலில், ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள தேவையான ஆற்றலில் நூற்றில் ஒரு பங்கு ஆற்றலை மட்டுமே எடுத்துக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கான தீர்வை கண்டறிவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றலை பயன்படுத்துவது இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story