கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 29). இவரது கணவன் முத்துப்பாண்டி. இவர்களுக்கு காவியா (9) என்ற பெண் குழந்தை உள்ளது. முத்துப்பாண்டி, மகேஸ்வரியை விட்டு பிரிந்து இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சேலத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மகேஸ்வரி தனது மகள் காவியாவுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றதால் பொதுமக்களும் மனுக்கள் கொடுப்பதற்காக வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மகேஸ்வரி தனது மகள் காவியா மீதும், தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பொதுமக்களும் மகேஸ்வரியையும், அவரது மகள் காவியாவையும் தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். போலீசார் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில் தனது புகார் மனு மீது சிவகாசி மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரி அவரது மகள் காவியாவையும் சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியிடம் அவர் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.


Next Story