தேனியில் காமராஜர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும், ச.ம.க. கோரிக்கை


தேனியில் காமராஜர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும், ச.ம.க. கோரிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் காமராஜர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் பெற்ற பயனாளிகள் சுயதொழில் தொடங்க நிதிஉதவி வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தேனி கிளை மற்றும் அல்லிநகரம் கிளை மூலம் சிறுவணிகக் கடன் உதவியாக 9 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் நேற்று நடந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. மேலும், 20 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் அளித்த மனுவில், ‘தேவதானப்பட்டி ஊருக்கு பின்புறம் தேசிய நெடுஞ்சாலை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் இணைப்புச் சாலைகளாக ஜெயமங்கலம் சாலை, எருமலைநாயக்கன்பட்டி சாலை, தேவதானப்பட்டி சாலை ஆகியவை உள்ளன. இணைப்புச் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 1½ ஆண்டில் 20–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் அரசுபாண்டி அளித்த மனுவில், ‘வைகை அணை பூங்காவில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி–மதுரை சாலையில் பாரஸ்ட்ரோடு பிரிவில் உள்ள ரவுண்டானாவில் காமராஜர் முழு உருவச்சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடமலை–மயிலை ஒன்றிய செயலாளர் காமராஜ் அளித்த மனுவில், ‘கடமலை–மயிலை ஒன்றியத்தில் அரசு விதிமுறைகளின் படி தேவையான கட்டிட உறுதிச்சான்று, சுகாதாரச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று, பள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரச் சான்று ஆகியவை இல்லாமல் வருசநாடு, முருக்கோடை, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

உத்தமபாளையம் தென்றல் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘தென்றல் நகரில் ரே‌ஷன் கடை, கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம், பள்ளி விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இந்த பகுதியில் மதுபானக்கடை அமைக்கக்கூடாது என்று ஏற்கனவே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மதுபானக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மதுபானத்தை குடித்துவிட்டு இரவு நேரங்களில் சிலர் ரகளை செய்து வருகின்றனர். எனவே இந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தேனி பாரஸ்ட்ரோடு 1–வது தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘பாரஸ்ட்ரோடு 1–வது தெருவில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளதால் வீட்டின் முன்பு வரை சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஓடையை தூர்வாரி, கழிவுநீர் தேங்கி நிற்காமல் கடந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தாடிச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், தங்கள் ஊரில் புதிய கோவில் கட்டும் பணிக்கு சிலர் இடையூறு செய்து வருகின்றனர். மேலும் தற்போது 60 ஆண்டுகள் பழமையான கோவில்களை இடிக்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்துவதுடன் இடையூறு செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

மேலும், தேவதானப்பட்டியை சேர்ந்த தோல்பாவை கூத்துக்கலைஞர் முத்துலட்சுமணராவ் என்பவர் அளித்த மனுவில், ‘நான் 6–வது தலைமுறையாக தோல்பாவை கூத்து நடத்தி வருகிறேன். தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தோல்பாவை கூத்து மூலம் இயற்கை வளம் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் சிக்கனம், மின்சார சிக்கனம், விவசாயம் போன்றவை குறித்து மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த எனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.


Next Story