தார்சாலை அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவ–மாணவிகள்
தார்சாலை அமைக்கக்கோரி பள்ளி மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு கும்ளாமரத்துபட்டியை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகள் சுமார் 100 பேர் படித்து வருகின்றனர். கண்ணனூர் பகுதியில் இருந்து கும்ளாமரத்துபட்டிக்கு 30 ஆண்டுகளாக தார்சாலை அமைக்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தோம். அவர்களும் திடீரென பாதையை அடைத்துவிடுவார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்த பின்னர் புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் தற்போது அந்த பணிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் மாணவ–மாணவிகள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதன்பின்பு பஸ் மூலம் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வரமுடியாது. இதனால் தார்சலை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.