அமராவதி அணை பாசன திட்டத்தின் கீழ் உள்ள வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகள் நிறுத்தம், கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
அமராவதி அணை பாசன திட்டத்தின் கீழ் உள்ள வாய்க்காலில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். மடத்துக்குளம் தாலுகா அமராவதி அணை பாசன திட்டத்தின் கீழ் உள்ள சோழமாதேவி கிராம ராஜவாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் காதர் முகமது தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
இந்த ஆண்டு சோழமாதேவியில் உள்ள அமராவதி அணை வாய்க்காலை குடிமராமத்து செய்யும் பணிக்காக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பணியை செய்வதற்கு விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.45 ஆயிரத்தை வங்கியில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டையும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.
கடந்த மாதம் 22–ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். சுமார் 4 மணி நேரம் வேலை செய்த நிலையில் எந்த வித காரணமும் தெரிவிக்காமல் வேலையை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நிறுத்தினார். ஆனால் வேலையை நிறுத்தியதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. தற்போது குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உகந்தகாலமாகும். காலம் கடந்து சாகுபடி செய்தால் வடகிழக்கு பருவ மழையால் சேதம் ஏற்படும். விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ளதால் வாய்க்கால் குடிமராமத்து பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபோல் கொமரலிங்கம் வாய்க்கால் மராமத்து பணிக்கு ரூ.9 லட்சம், கண்ணாடிபுத்தூரில் ரூ.8 லட்சம், கணியூரில் ரூ.4.20 லட்சம், கடத்தூரில் ரூ.8 லட்சம், காரத்தொழுவில் ரூ.7 லட்சம் என அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தந்த விவசாயிகளின் பங்களிப்பாக அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து 10 சதவீத தொகையை செலுத்தியும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவில்லை என்று அந்தந்த பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
தாராபுரம் தாலுகா நந்தவனம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் வசதி சரிவர இல்லை. இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்து விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பிட வசதியில்லாததால் பெரிதும் சிரமம் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் வீதியில் நடமாட முடியவில்லை. எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.