மதுபோதையில் தகராறு செய்ததால் மாமனாரே தீர்த்துக்கட்டியது அம்பலம்


மதுபோதையில் தகராறு செய்ததால் மாமனாரே தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:45 AM IST (Updated: 26 Jun 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்தவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் தகராறு செய்ததால் மாமனாரே தீர்த்துக்கட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் கே.வி.கே. சாமி நகரை சேர்ந்த விக்ரமன் மகன் ஹரிக்குமார் (வயது 27), எலக்ட்ரீசியன். ஹரிக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஹரிக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த கவிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி கே.வி.கே.சாமி நகர் சுடுகாட்டு பகுதியில் ஹரிக்குமார் காயங்களுடன் பிணமாக கிடந்தார். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஹரிக்குமார் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கவிதாவின் தந்தை சுப்பிரமணி (49), உறவினரான ஆட்டோ டிரைவர் சத்தியநாராயணன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் 2 பேரும் ஹரிக்குமாரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் சுப்பிரமணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது மகள் கவிதாவும், ஹரிக்குமாரும் காதலித்த னர். அவர்கள் விருப்பப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பிறகு ஹரிக்குமார் மது அருந்திவிட்டு வந்து என்னுடைய மகளிடம் தகராறு செய்து வந்தார். நானும், நாளடைவில் எல்லாம் சரியாகி விடும். ஹரிக்குமாரும் மது பழக்கத்தை கைவிட்டு விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர், மது பழக்கத்தை கைவிடவில்லை. மாறாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் என்னுடைய மகள்தான் தற்கொலைக்கு முயன்றாள். இதனால் ஆத்திரம் அடைந்த நானும், என்னுடைய மற்றொரு மகளின் கணவரான சத்தியநாராயணனும் சேர்ந்து ஹரிக்குமாரை கண்டித்தோம்.

அப்போது, அவர் தானும் விஷம் குடித்ததாக கூறினார். ஆனாலும் அவர் மீது இருந்த ஆத்திரத்தில் நாங்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கினோம். அவர், வீட்டில் ரத்தக்காயங்களுடன் கிடந்தார். நாங்கள் கவிதாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டோம். ஆஸ்பத்திரியில் இருந்து இரவு வீட்டுக்கு வந்தோம். அப்போது வீட்டில் ஹரிக்குமார் இறந்த நிலையில் கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தோம். சிறிது நேர யோசனைக்கு பிறகு, ஹரிக்குமார் உடலை அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் வீச முடிவு செய்தோம். அதன்படி ஆட்டோவில் ஏற்றிகொண்டு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் வீசி விட்டோம். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி என்னையும், என்னுடைய இன்னொரு மருமகனையும் கைது செய்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story