ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2018 4:45 AM IST (Updated: 26 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

உயர்மட்டக்குழு ஆய்வு முடிந்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது நடந்த கலவரம் காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே ஆலையில் உள்ள கன்டெய்னரில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டது. கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. ஆலையில் இருந்து மொத்தம் 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் கந்தக அமிலம் முற்றிலும் அகற்றப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று கூறியதாவது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கந்தக அமிலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் கசிவு தடுக்கப்பட்டு உள்ளது. ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வை முடித்து உள்ளனர். அவர்கள் அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் சுமார் 5 ஆயிரம் டன் கந்தக அமிலம், சுமார் 3 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலம், 50 டன் கியாஸ், பர்னஸ் ஆயில், டீசல், குழாய் உடைப்பை சரிசெய்வதற்கான ரசாயனம், தாமிரம் தயாரிக்கப்பட்ட பிறகு கிடைக்கப்பெற்ற விலை உயர்ந்த பொருட் கள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த ரசாயனங்களை எப்போது அகற்றுவது? அதனை எப்படி அகற்றலாம்? என்பது குறித்து உயர்மட்டக்குழு அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். இந்த விதிகளை ஏதேனும் தொழிற்சாலைகள் மீறி இருந்தால் நோட்டீஸ் கொடுத்து, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story