காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டம்


காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கீரனூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பாசிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (22). பட்டதாரி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைத்தனர். இந்தநிலையில் மணிகண்டனும், வினோதினியும் கோயம்புத்தூருக்கு சென்று கடந்த 2 மாதங்களாக அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் இவரும் கடந்த மாதம் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு கீரனூருக்கு வந்தனர். அப்போது திடீரென காரில் வந்த சிலர் மணிகண்டனை கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோதினி புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர். பின்னர் வினோதியின் பெற்றோரை வரவழைத்து அவரிடம் வினோதினியை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு திடீரென வினோதினி கீரனூரில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு மணிகண்டனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும், கடத்தி சென்றவர்களிடம் இருந்து அவரை மீட்டுத்தர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலை அலுவலர் செல்லத்துரை தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வினோதினியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மணிகண்டன் வந்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவேன் என கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

பின்னர் மதியம் 2 மணி அளவில் வினோதினி, நான் கீழே இறங்கி வருகிறேன். ஆனால் நீங்கள் எனக்காக பஸ் மறியலில் ஈடுபட்ட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு அங்கிருந்த பொதுமக்கள், நீ கீழே இறங்கி வா. உனக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என கூறினர். இதையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து வினோதினி கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வினோதினியின் காதல் கணவர் மணிகண்டனை யார் கடத்தி சென்றார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீரனூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story