ஒண்டிவீரன் மணிமண்டப பணிகளை முழுமைப்படுத்த கோரிக்கை: கலெக்டர் அலுவலகத்துக்கு மண்வெட்டியுடன் வந்த ஆதித்தமிழர் பேரவையினரால் பரபரப்பு


ஒண்டிவீரன் மணிமண்டப பணிகளை முழுமைப்படுத்த கோரிக்கை: கலெக்டர் அலுவலகத்துக்கு மண்வெட்டியுடன் வந்த ஆதித்தமிழர் பேரவையினரால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jun 2018 3:49 AM IST (Updated: 26 Jun 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

ஆதித்தமிழர் பேரவையினர் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு இரும்பு கம்பி, இரும்பு சட்டி, மண்வெட்டி ஆகியவற்றுடன் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை,

ஒண்டிவீரன் மணிமண்டப பணிகளை முழுமைப்படுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்வெட்டியுடன் வந்த ஆதித்தமிழர் பேரவையினரால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

ஆதித்தமிழர் பேரவையினர் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு இரும்பு கம்பி, இரும்பு சட்டி, மண்வெட்டி ஆகியவற்றுடன் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், ஒண்டிவீரன் மணிமண்டப பணியை முழுமைப்படுத்தவேண்டும். அங்குள்ள கல்வெட்டான் குழியை மூட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆதித்தமிழர் பேரவையினர், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாளையங்கோட்டை கோர்ட்டு அருகில் ஒண்டிவீரன் மணி மண்டபம் கட்ட 64 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 15 சென்ட் நிலத்தில் மட்டுமே மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. மீதி உள்ள நிலத்தில் கல்வெட்டான் குழி உள்ளது. இந்த கல்வெட்டான் குழியை மூடி, அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வண்ணார் சமுதாய முன்னேற்ற நல சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சலவை தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இலவச தேய்ப்பு பெட்டி வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நெல்லை பாராளுமன்ற தொகுதி தலைவர் வி.பி.துரை, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தாமிரபரணி ஆற்றில் உள்ள 5-வது அணைக்கட்டான பழவூர் அணைக்கட்டியில் இருந்து கார் சாகுபடிக்காக பாளையங்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்த அணைக்கட்டின் மூலம் 9 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். பாளையங்கால்வாயில் பராமரிப்பு பணி நடப்பதாக கூறி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மீனவ கூட்டமைப்பு நிர்வாகிகள் அந்தோணி, ரைமண்ட் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மீனவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு, பல மீனவர்களின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக விசைபடகுகள் உள்ளன. பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983- ஐ கொண்டு வந்து உள்ளது. ஆனால் தற்போது விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாக அந்த சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அந்த சட்டத்தை சில அதிகாரிகள் மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கடலுக்கு வந்து இரவு 9 மணிக்குள் மீன்பிடித்து திரும்ப வேண்டிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைபடகுகள் அதிகாலை 2 மணிக்கே வந்து எங்கள் உடைமைகளை சேதப்படுத்துகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சிக்கு உடனடியாக ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்று கூறி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மாநகர ஒருங்கிணைப்பாளர் அப்துல் சுக்கூர்ரகுமானி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனை பட்டாவும், குடிநீர் வசதியும் செய்து தரக்கோரி மனு கொடுத்தனர்.

சிவந்திபட்டியை சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்க தலைவர் அதிசயபாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை செயலாளர் மூர்த்தி, சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகவேல் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற 2-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.



Next Story