கணவன் உயிரோடு இருக்கும்போதே விதவை சான்றிதழ் வாங்கி அரசு பணிக்கு சேர்ந்த பெண் கலெக்டர் அதிர்ச்சி
கணவர் உயிருடன் இருக்கும் போதே விதவை சான்றிதழ் வாங்கி அரசு பணிக்கு சேர்ந்த பெண் குறித்து அறிந்த கலெக்டர் ஷில்பா அதிர்ச்சி அடைந்தார்.
கடையநல்லூர்,
கணவர் உயிருடன் இருக்கும் போதே விதவை சான்றிதழ் வாங்கி அரசு பணிக்கு சேர்ந்த பெண் குறித்து அறிந்த கலெக்டர் ஷில்பா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
அங்கன்வாடி அமைப்பாளர் பணிநெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகரசபைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேல்சாமி மகன் கார்த்திகேயன். இவருக்கும், சங்கரன்கோவில் தாலுகா ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு மகள் கோமதிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் கார்த்திகேயனிடமிருந்து விவகாரத்து கேட்டு சங்கரன்கோவில் கோர்ட்டில் கோமதி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி அமைப்பாளர் பணிக்கான நேர்முகத்தேர்வில் கோமதியும் கலந்து கொண்டார். அப்போது அவர் ராமநாதபுரம் கிராமம் அங்கன்வாடி அமைப்பாளராக தேர்வாகி தற்போது பணிபுரிந்து வருகிறார்.
விதவை சான்றிதழ்இதுபற்றி அறிந்த கார்த்திகேயன் தனது மனைவி பணிநியமனம் பெற்றது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார். அதில் கோமதி தனது கணவர் இறந்துவிட்டார் என கூறியும், விதவைச்சான்றிதழ் பெற்றும், அதன் முன்னுரிமையில் பணி நியமனம் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த மனுநீதிநாள் முகாமில் கலெக்டர் ஷில்பாவிடம் புகார் செய்தார். புகாரை படித்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர் கூறுகையில் இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கணவன் உயிருடன் இருக்கும் போதே விதவை சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.