லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகள் பாதிப்பு


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகள் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் - குமுளி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இயற்கை வளம் நிறைந்த இந்த மலைப்பாதையில் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், உடும்பு, மலைப்பாம்புகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக பாதையோரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.

அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதையோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். அப்போது அவர்கள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் தண்ணீர்் பாட்டில்களையும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதனால் குமுளி செல்லும் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்த பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவு பண்டங்களை வனவிலங்குகள் உண்ணுவதால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு சீக்கிரமாக இறக்க நேரிடுகின்றன. இதனால் வனப்பகுதியில் குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைப்பாதையில் வனத்துறையினர் ரோந்துபணி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story