பந்தலூர் பகுதியில் வேகமாக பரவும் கோமாரி நோய் 5 வயது பசுமாடு இறந்தது
பந்தலூர் பகுதியில் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு 5 வயது பசுமாடு இறந்தது.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பந்தலூர் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது 5 வயது பசுமாடு நேற்று திடீர் என்று இறந்தது. இதனால் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:– தற்போது கோமாரி நோய் பரவாமல் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளில் போதிய கால்நடை டாக்டர்கள் இல்லை.ஆகவே இது குறித்து அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூறினார்கள்.
இந்த நிலையில் கூடலூர் வட்டாரத்தில் கால்நடை டாக்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நேற்று சிறப்பு மலை பகுதி மேம்பாட்டு திட்ட டாக்டர் டேவிட்மோகன் தலைமையில் கால்நடை உதவியாளர்கள் சண்முகம், சுரேஷ் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் கோமாரிநோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்பட்டது.