ரஜினிகாந்த் மனைவிக்கு சொந்தமான பள்ளியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு


ரஜினிகாந்த் மனைவிக்கு சொந்தமான பள்ளியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 27 Jun 2018 3:45 AM IST (Updated: 27 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் மனைவிக்கு சொந்தமான பள்ளியில் உள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி, லதா ரஜினிகாந்துக்கு சொந்தமான ‘தி ஆஷ்ரம்’ பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(வயது 48) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் பள்ளியில் உள்ள மரத்தின் கிளை ஒன்று பள்ளியின் பெயர் பலகையை மறைக்கும் வகையில் வளர்ந்து இருந்தது. இதையடுத்து கடந்த 23-ந் தேதி அந்த மரக்கிளையை வெட்டுவதற்காக ஆறுமுகம் மரத்தின் மீது ஏறினார்.

மரக்கிளையை வெட்டும் போது ஆறுமுகம் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த ஆறுமுகத்தை அங்கிருந்த சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story