வரி பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
வரி பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மின்துறையில் ரூ.100 கோடிக்கும் மேல் மின்கட்டண பாக்கி வசூலிக்கப்படாமல் உள்ளது. ஆனால் மின்துறை அந்த கட்டண பாக்கிகளை வசூலிக்காமல் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருகிறது.
இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் வரிபாக்கியை வசூலிக்க மின்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் தலையிட்ட கவர்னர் கிரண்பெடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட்டார்.
அதன்படி கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை புதுவை மின்துறை வெளியிட்டது. இதில் வணிக அடிப்படையிலான மின் கட்டண பாக்கியாக தனி நபர் அதிகபட்சமாக ரூ.38 லட்சம் வைத்துள்ளார். வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணமாக வில்லியனூர் மணவெளியை சேர்ந்த ஒருவர் அதிகபட்சமாக ரூ.22 லட்சத்து 29 ஆயிரத்து 796 பாக்கி வைத்துள்ளார்.
தற்போது மின்பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இது புதுவை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் உள்ளாட்சித் துறையில் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை செயலாளர் ஜவகர் கவர்னர் கிரண்பெடிக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வரிபாக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து பாக்கிகளை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுத் துறைகள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் தேவையான நிதியை பெற வளங்களை உருவாக்கவேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.